Sunday, December 5, 2010

சிங்கப்பூரில் மாணவர்கள் தமிழ்மொழி படிப்பதால் விளையும் பயன்கள்

சிங்கப்பூர் மாணவர்களுள் பெரும்பாலானோர் தமிழ் மொழியை ஒரு பாடமாகத்தான் படிக்கின்றனரே தவிர, அம்மொழியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணத்தினாலோ அல்லது தமிழ்மொழி மீதுள்ள பற்றீன் காரணத்தினாலோ படிப்பதில்லை. ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும், அதுதான் உண்மை. ஆண்டுக்கு ஆண்டு, தமிழ் மொழியின் பாடத்திட்டம் எளிமையாகிக் கொண்டே வருவதற்கு இதுதான் முக்கிய காரணம் எனலாம். புத்தாக்கச் சிந்தனையைத் தூண்டும் வகையில் பாடப்பகுதியும் வண்ணங்கள் நிறைந்த படங்களும் இருந்தால்தான் மாணவர்கள் பாடப்புத்தகங்களையே பார்க்கின்றனர் என்ற நிலைமை வந்துவிட்டது. பாடம் கற்பிக்க தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான் மாணவர்களின் ஆர்வத்தை ஈர்க்க வேண்டியுள்ளது. இவ்வாறு செய்வதால் மாணவர்களுக்குப் பயன் உண்டா? நிச்சயம் உண்டு. அப்பயன்களை இக்கட்டுரையில் மேலும் விரிவாகக் காணலாம்.

திருவள்ளுவர்
சுப்பிரமணிய பாரதி

கம்பர்
மாணவர்களுக்குத் தமிழ் மொழி மீது ஏன் ஆர்வம் ஏற்படுவதில்லை என்று பலரும் கேட்கலாம். அதற்கு சில காரணங்கள் உண்டு. முதலில், தமிழ் மொழி எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்று இரட்டை வழக்குகளைக் கொண்ட ஒரு மொழியாகும். இதனால், மாணவர்கள் பேச்சு வழக்கினையே அதிகமாக விரும்புகிறார்கள். வகுப்பில் எழுத்து வேலைகள் வரும்போது மாணவர்கள் பேச்சு வழக்கிலிருந்து எழுத்து வழக்கிற்கு மாறுவதற்கு சிரமப்படுகின்றனர், சில நேரங்களில் குழம்பிவிடுகின்றனர். மாணவர்கள் தமிழில் ஆர்வம் காட்டாததற்கு மற்றொரு முக்கிய காரணம் மொழிக்கலப்பு. பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் ஆங்கிலமே பிரதானமாகப் பேசப்படுகிறது. இச்சூழ்நிலையில், மாணவர்கள் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தையும் கலந்து பேசிவிடுகின்றனர். அவ்வாறு பேசுவது அவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது என்றாலும் அவ்வாறு செய்வது தவறு என்று மாணவர்களுக்கு எடுத்துரைக்கும்போது, தமிழே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுகின்றனர்.

கண்ணதாசன்
பாரதிதாசன்




இத்தகைய பிரச்சினைகள் இருந்தாலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்கள் சிங்கப்பூரில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, இருமொழிப் புலமையோடு மாணவர்களை உருவாக்குவது சாத்தியம் என்பது புலனாகிறது. அந்தச் சவாலைச் சமாளிக்கத்தான் இன்றைய தமிழாசிரியர்களும் ஆயத்தமாகிறார்கள். இவ்வளவு முயற்சிகள் அவசியாமா என்ற கேள்வி எழலாம். ஆனால், மாணவர்கள் தமிழ் மொழியைப் படிப்பதால் விளையும் பயன்களை ஆராயும்போது அக்கேள்விகளுக்கு இடமிருக்காது.
(1)    இனம், மொழி, அடையாளம் பற்றிய விழிப்புணர்வு:

தமிழ் மொழியை தமிழர்கள் அல்லாமல் யார் போற்றுவது; பேசுவது என்ற விழிப்புணர்வை மாணவர்கள் அடைய வேண்டுமானால், அவர்கள் தமிழ் மொழியை விரும்பிப் படிக்க வேண்டும். நிறைய பெற்றோர்கள் வீட்டில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவதால்தான், இன்றைய மாணவர்களும் சிதைந்தத் தமிழில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தலைமுறையினரை ஆசிரியர்கள் மாற்றாவிட்டால், அடுத்த தலைமுறையினருக்குத் தமிழே தெரியாத சூழ்நிலை உருவாகலாம். எனவே, தமிழ் படிப்பதன்வழி வீட்டிலும் நண்பர்களுடனும் பேசுவதற்கு தமிழ் ஏதுவான மொழி என்ற மனப்போக்கினை மாணவர்கள் பெறுவர்.

(2)    ஆங்கிலத்திற்கு நிகராக தமிழ் பேச்சு மொழியாதல்:

சிங்கப்பூர் மாணவர்கள் தமிழில் பேசுவதைவிட ஆங்கிலத்தில் பேசுவதற்கே அதிகமான வாய்ப்புகள் அமைகின்றன. பல இன நண்பர்களோடு பழகுவதால், ஆங்கிலத்தில் அவர்களால் சுலபமாக பேச முடிகிறது. தமிழ் மொழியை மாணவர்கள் விரும்பிப் படிக்கும்போது, தமிழில் எவ்வாறு எளிமையாக பேசலாம் என்று அவர்கள் முதலில் அறிந்துகொள்வர். வகுப்பறையிலும் பேச்சு வழக்கினைக் கொண்டுவரும்போது, மாணவர்களுக்குத் தமிழில் பேச அதிக சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. அதோடு, தமிழிலும் நன்றாக பேசலாம் என்ற நம்பிக்கை உண்டாகும்.

(3)    தமிழ் அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல்:

தமிழ் மொழிப் பாடத்திட்டமும் தேர்வும் எவ்வளவுதான் எளிமையாக இருந்தாலும், அவற்றைச் சமாளிக்க மாணவர்கள் பலரும் சிரமப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், தமிழ் மொழிப் பற்றிய அறிவு அவர்களுக்குப் போதவில்லை என்பதே ஆகும். மாணவர்கள் தமிழ் மொழியைப் படிக்கும்போது, தமிழர் மரபு, தமிழர் குடி, கலாசாரம் போன்றவற்றையும் சேர்த்து படிக்கின்றனர். அதனால் மாணவர்களின் தமிழ் மொழி அறிவு நாளுக்கு நாள் மேம்படும். உதாரணத்திற்கு, திருமணச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருள்களின் நோக்கம் குறித்து வகுப்பில் ஆசிரியரும் மாணவர்களும் கலந்து பேசும்போது, மாணவர்கள் அச்செய்திகளை நன்கு ஞாபகம் வைத்திருப்பர்.

(4)    தாய்மொழிப் பற்று:

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல, பாடத்திற்காகவும் தேர்வுக்காகவும் தமிழ்ப் படிப்பது மதிப்பெண்களுக்காகத்தான். எழுத்து வழக்கு என்பதற்கும் அப்பால் சென்று பேச்சு வழக்கையும் பாடத்தில் சேர்க்கும்போது மாணவர்கள் முன்வந்து மனமுவந்து தமிழில் பேச முனைகின்றனர். மாணவர்களின் முதல் சில முயற்சிகளின் பேசும் தமிழில் சில பிழைகள் ஏற்படும். எனினும், மாணவர்களைக் கண்டிக்காமல், தொடர்து அவர்களுக்கு உற்சாகம் கொடுத்தால் அவர்களால் நிச்யமாக தமிழில் நன்றாகப் பேச முடியும். மற்றவர்கள் தமிழில் பேசும்போது செய்கின்ற பிழைகளையும் அவர்களால் திருத்த முடியும். அந்த தன்னம்பிக்கை மாணவர்களுக்குள் குடிகொண்டால், அவர்கள் தங்களின் தாய்மொழி மீது கொண்டுள்ள பற்று அதிகரிக்கும் என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஆகவே, சிங்கப்பூர் மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதால் விளையும் பயன்களை நாம் தொலைநோக்குப் பார்வையுடன் காண வேண்டும். தமிழர்களின் தாய்மொழி செழிப்படைவதோடு, சிங்கப்பூரில் தமிழர்களின் பாரம்பரியமும் கலாசாரமும் பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது. அதனால், ஆசிரியர்களும் குடும்பத்தாரும் தமிழில் சரளமாகவும் எளிமையாகவும் பேசவும் எழுதவும் இன்றைய மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தாரின் கூட்டு முயற்சி இல்லையெனில், இன்றைய மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழி புழக்கத்தை அதிகரிப்பது கடினமாகும்.



அம்மா!

அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது
நம்மை பிரிக்க அல்ல..

அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு
வெட்டப்பட்ட ரிப்பன்.